November 3, 2026
தண்டோரா குழு
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 17-வது நிறுவனர் தின விழா ‘டைனமிக்ஸ் 2026’,எனும் தலைப்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது.பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ்,தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் முன்னி்லை வகித்தார்.
பள்ளியின் தலைமையாசிரியை பூனம் சியால் அனைவரையும் வரவேற்று பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் லெப்டினன்ட் ஜெனரல் அருண், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும்,பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பாராட்டினார்.நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளம் தலைமுறையினரின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தன்னம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் பொறுப்புணர்வுடன் தங்களது இலட்சியங்களை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,2025–2026 கல்வியாண்டில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தகவல் முறைமை ஆகிய பாடங்களிலும், 10-ஆம் வகுப்பில் தமிழ் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவ,மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில், மாணவர்களின் ராக் பேண்ட் இசை நிகழ்ச்சி,புற ஊதா ஒளி நடனம், நிழல் நடனம்,சமகால மற்றும் பாரம்பரிய நடனங்கள், வீதி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
வண்ணமயமான ஆடைகள், கற்பனைத்திறன் மிக்க அரங்க அலங்காரங்கள் பிரம்மாண்டமான மேடை அமைப்புகள் ஆகியவற்றுடன் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.