November 2, 2026
தண்டோரா குழு
மணிகண்டன் வயது 27 இவர் சேலம் மாவட்டம்,காந்திநகரில் அவரது தந்தை வெங்கடேசன் தாய் தி.நவமணி அவர்களுடன் வசித்துவந்தார்.
இவர் கடந்த 26.10.2026ஆம் தேதி அவர் சேலம் பட்டர்பிளை பிரிட்ஜ் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.உடனடியாக அவர் முதலுதவி சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 30.10.2026-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தந்தை வெங்கடேசன் தாய் நவமணி மணிகண்டன் அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது இருதயம்,கல்லீரல்,சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், இருதயம், மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும்.
பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய மணிகண்டன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.