August 8, 2025
தண்டோரா குழு
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025 கார் பந்தய போட்டி கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.ஜேகே டயர் நோவிஸ் கோப்பை மற்றும் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த பந்தய வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால், தொடக்கச் சுற்று ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கும்.
ஜம்மு, டெல்லி, சிக்கிம், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு, ஜே.கே. டயர் வழங்கும் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை, அதன் தனித்துவமான புரோ-ஆம் என்னும் புதிய முறையில் அமெச்சூர் மற்றும் தொழில்முறை ரைடர்கள் ஒன்றாக போட்டியிட இருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள திறமைமிக்க மோட்டார் சைக்கிள் ரைடர்களை கண்டறிந்து தேர்வு செய்யும் வகையில் – “ஸ்ட்ரீட் டு டிராக்” என்னும் போட்டிகளை, ராயல் என்பீல்ட் நடத்தி அதில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் இருந்து மொத்தம் 64 அமெச்சூர் ரைடர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் இறுதித் தேர்வுச் சுற்றுக்கு 50 தொழில்முறை ரைடர்களுடன் இணைந்தனர். தேர்வு செயல்முறையின் முடிவில், அமெச்சூர் மற்றும் புரோவில் வேகமான ரைடர்களில் 24 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ரைடர்கள் 5வது ஆண்டாக தற்போது நடைபெறும் இந்தப் போட்டியில் ராயல் என்பீல்டின் விருது பெற்ற 648cc எஞ்சின் மூலம் இயக்கப்படும் ஒரே மாதிரியான, ரேஸ்-டியூன் செய்யப்பட்ட கான்டினென்டல் ஜிடி-ஆர்650 மோட்டார் சைக்கிள்களை ஓட்ட இருக்கிறார்கள்.
ஜே.கே. டயர் தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஜேகே டயர் நோவிஸ் கோப்பை போட்டி கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பார்முலா கார்களைக் கொண்டு நடைபெறும் இந்த போட்டி பார்முலா பந்தயத்தில் பங்கேற்க விரும்பும் புதுமுகங்களுக்கு ஏற்ற போட்டியாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. இந்த ஆண்டு போட்டியில் அவலாஞ்ச் ரேசிங் (முன்னாள் பந்தய வீரர் பசல் மாலிக்கிற்குச் சொந்தமானது), எம்-ஸ்போர்ட் (சர்வதேச பந்தய நட்சத்திரம் அர்மான் இப்ராஹிமுக்குச் சொந்தமானது), டிடிஎஸ் ரேசிங் (முன்னாள் தேசிய பந்தய சாம்பியன் தில்ஜித் டிஎஸ்ஸுக்குச் சொந்தமானது), மொமண்டம் மோட்டார்ஸ்போர்ட் (முன்னாள் பந்தய வீரர் ரஷீத் கானுக்குச் சொந்தமானது) மற்றும் டெல்டா ஸ்பீட்ஸ் (பந்தய ஓட்டுநர் மோஹித் ஆர்யனுக்குச் சொந்தமானது). ஆகிய அணிகளைச் சேர்ந்த 27 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
அணியின் தலைமை நிர்வாகிகளின் அனுபவமும், இந்த இளம் வீரர்களின் ஆர்வம் மற்றும் ஆற்றலும் இணைந்து, பந்தயங்களை உற்சாகமாகவும் போட்டித்தன்மையுடனும் மாற்றுவது உறுதி. இந்த சீசனில் நோவிஸ் கோப்பை 10 சுற்றுகள் வீதம் 3 போட்டிகளும் மற்றும் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை 8 சுற்றுகள் வீதம் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது.