September 1, 2026
தண்டோரா குழு
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் 5-வது ‘எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு 2026’-ன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், ஒலிம்பிக் சாம்பியன், ககன்யான் விண்வெளி வீரர், கலைஞர் மற்றும் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.
இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன் தொடங்கி வைத்தார். இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.காலை அமர்வில் இந்திய விமானப்படை அதிகாரியும் ககன்யான் விண்வெளி வீரருமான ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் மாணவர்களுடன் கலந்துரையாடி, தலைமைத்துவம், விடாமுயற்சி மற்றும் இலக்கை நோக்கிய பயணம் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து, ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள்’ நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி வரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மாணவர்களுடன் கலந்துரையாடினார். தனது விளையாட்டுப் பயணம், ஒழுக்கம், மன உறுதி, சமநிலை மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.
திறமை மட்டும் வெற்றிக்கு போதாது என்றும், மனம், இதயம், நிதானம் மற்றும் சமநிலையை ஒருங்கிணைத்து தொடர்ந்து முயற்சி செய்வதே சிறந்த முடிவுகளை உருவாக்கும் என்றும் அவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதையடுத்து பரதநாட்டியக் கலைஞரும் நடன இயக்குநருமான ருக்மணி விஜயகுமார் தனது நடன நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் மூலம் படைப்பாற்றல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ‘எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்’ என்ற மாநாட்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு கதைசொல்லல், இசை மற்றும் நடனம் இணைந்த இசை நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மதிய அமர்வில் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் மாணவர்களுடன் கலந்துரையாடினார். விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம், வெற்றியை எதிர்கொள்ளும் விதம் மற்றும் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள முயற்சிகள் குறித்து அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, வெளிப்பள்ளி மாணவர்களுக்கான ‘ஸ்டூடண்ட் ப்ரணர் விருதுகள்’ வழங்கப்பட்டன. நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை முன்வைத்த மாணவர்களின் புதுமையான சிந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டன.
முதலிடம் – AIDE:
ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் பள்ளி, குருகிராமைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் அத்விக் ஐயர் உருவாக்கிய AIDE தொழில்நுட்பம்,முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குளியலறையில் தவறி விழுந்தால் உடனடியாக கண்டறிந்து அவசர உதவியைப் பெற வழிவகுக்கிறது.
இரண்டாமிடம் – Smart Helmet:
ஓசூரில் உள்ள தி அசோக் லேலண்ட் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் ஸ்ருத்திகா சரவணன் மற்றும் ரக்ஷிதா ஞானசேகரன் உருவாக்கிய ஸ்மார்ட் ஹெல்மெட், செயற்கை நுண்ணறிவு, கேமரா மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி ஓட்டுநரின் சோர்வு, தூக்கம் மற்றும் சாலை அபாயங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாமிடம் – Bite & Go:
சென்னை பப்ளிக் ஸ்கூல், அண்ணா நகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி எஸ். மெர்சி இளவெயினி உருவாக்கிய ‘Bite & Go’ சிறுதானிய புரோட்டீன் பார், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்டது.
மேலும், ‘The Mudgar Method’ மற்றும் ‘The Art of Movement’ ஆகிய செயல்முறைப் பயிலரங்குகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில்,
“வகுப்பறையைத் தாண்டி வெளி உலகை அறிந்து அதனுடன் தொடர்பு கொள்ளும்போதுதான் கற்றல் உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகிறது. பாடப்புத்தகங்களைத் தாண்டிய நீண்டகால தாக்கத்தை இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படுத்தும்” என்றார்.
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் கூறுகையில்,
“பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வாய்ப்பை வழங்குவதே இந்த மாநாட்டின் நோக்கம். வெற்றி என்பது நேரான பாதை அல்ல என்பதையும், திறமையுடன் ஒழுக்கம், ஆர்வம் மற்றும் தொடர்ந்து கற்கும் தைரியமும் அவசியம் என்பதையும் சாதனையாளர்களின் அனுபவங்கள் மாணவர்களுக்கு உணர்த்துகின்றன” என்றார்.
விளையாட்டு, கலை, தலைமைத்துவம், புதுமை மற்றும் தொழில்முனைவோர் சிந்தனை ஆகியவற்றை ஒருங்கிணைத்த இரண்டாம் நாள் நிகழ்ச்சி, “எதிர்காலத்தை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், அதை நாமே உருவாக்க வேண்டும்” என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைக்கும் வகையில் அமைந்தது.