September 23, 2018
தண்டோரா குழு
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸிற்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான
கருணாஸ் கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் மற்றும் தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் குறித்தும் கருணாஸ் அவதூறாக பேசினார்.அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இதற்கு கருணாஸ் வருத்தமும் தெரிவித்தார். இதற்கிடையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், கருணாஸை சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, எம்.எல்.ஏ.கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.