September 8, 2018
தண்டோரா குழு
ஊழலில் கொடிகட்டி பறக்கும் அதிமுக அமைச்சர்களில் நம்பர் 1 வேலுமணி என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ள நிலையில், தற்போது மேலுமொரு அமைச்சர் ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கிடையில் தற்போது மேலும் ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் பெருமான அரசு கான்டராக்ட் பணிகள் கிடைக்க வழி செய்துள்ளார் என பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின்,
“ஏற்கனவே குட்கா ஊழல் குறித்த செய்திகள் வெளியானபோது அது குறித்து சட்டப்பேரவையில் பேசினோம். அந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெறுவதை உறுதி செய்தோம். அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. இப்போது, அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
இது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் எல்லா அமைச்சர்களும் அவர்களது துறையில் ஊழலில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையே உணர்த்துகிறது.ஊழலில் கொடிகட்டி பறக்கும் அதிமுக அமைச்சர்களில் வேலுமணி தான் நம்பர் 1 எனக் கூறியுள்ளார். மேலும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் திமுக வழக்கு தொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு வேலுமணி மறுப்பு:
அதிமுக ஆட்சியின் வேகத்தையும் அம்மா வழியில் நடக்கும் நல்லாட்சியையும் ஜீரணிக்க முடியாமல் சிலர் அநாகரிக அரசியல் செய்கின்றனர். என்னைப் பற்றி தொலைக்காட்சியில் வெளியான செய்தி டிஆர்பி-க்காக கட்டமைக்கப்பட்டது. அந்த செய்தியை அநேகம் பேர் பார்த்திருக்கலாம் ஆனால் அதன் பின்னணியில் மறைமுக சதி இருக்கிறது, “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. என்னை அவமானப்படுத்தும் நோக்கில் மக்கள் என் மீது கொண்டுள்ள அபிமானத்தை சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை என மறுப்பு தெரிவித்துள்ளார்.