February 24, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது விரைவான டெலிவரி சேவையான ‘பிளிப்கார்ட் மினிட்ஸ்’ சேவையை கோவையில் துவக்கி உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அன்றாடத் தேவைகளை சில நிமிடங்களில் டெலிவரி செய்கிறது. தற்போது கணபதி மற்றும் வடவள்ளியில் இந்த சிறிய வினியோக மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மளிகை பொருட்கள், மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ் என பல பொருட்களை உள்ளடக்கிய இந்த சேவை விரைவில் போத்தனூர், பீளமேடு மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட உள்ளது.
உள்ளூர் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, ஆவின், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சக்தி மசாலா மற்றும் ஹட்சன் போன்ற பிரபலமான பிராண்டுகளின் பொருட்களையும் பிளிப்கார்ட் மினிட்ஸ் வழங்குகிறது. அன்றாடத் தேவையான பொருட்கள் மற்றும் அடிக்கடி ஆர்டர் செய்யப்படும் பொருட்களை மிக விரைவாக டெலிவரி செய்யும் வகையில் இவை துவக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கோவை நகர மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எளிதாக வாங்க முடியும். கோவை முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பிளிப்கார்ட் வழங்குகிறது. வலுவான வினியோக கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், விவசாயிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, தேசிய அளவில் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து அவர்களின் நீண்டகால வளர்ச்சிக்கு பிளிப்கார்ட் மினிட்ஸ் உதவுகிறது.
இது குறித்து பிளிப்கார்ட் மினிட்ஸ் பிரிவின் துணைத் தலைவர் குணால் குப்தா கூறுகையில்,
“சமீபத்தில் சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இந்த மையம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் டிஜிட்டல் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், அன்றாடத் தேவையான பொருட்களை விரைவாகவும் அதேசமயம் சிறந்த விலையிலும் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சிறு வணிகர்கள் முதல் விவசாயிகள் வரை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும், டிஜிட்டல் வர்த்தகத்தின் நன்மைகள் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதையும் இந்த முயற்சி உறுதி செய்கிறது” என்றார்.
மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான கிடங்குகள் என ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பிளிப்கார்ட்டின் பெரிய அளவிலான விநியோகக் கட்டமைப்பிற்கு இந்த புதிய சிறிய விநியோக மையங்கள் கூடுதல் பலமாக இருக்கும். இந்த பெரிய மற்றும் சிறிய விநியோக மையங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியானது, கோயம்புத்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் கிடங்கு பராமரிப்பு, தளவாடங்கள் மற்றும் டெலிவரி பணிகளில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.