September 14, 2018
இஸ்ரோ மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது,1994ஆம் ஆண்டில், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு, வழக்கு 1996ஆம் ஆண்டில் மூடப்பட்டது. உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ஆம் ஆண்டில் விடுவித்தது. மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,நம்பி நாராயணனை துன்புறுத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள முன்னாள் ஏடிஜிபி சிபி மேத்யூ, ஜோஷ்வா உள்ளிட்ட 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நம்பி நாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.