January 6, 2026
தண்டோரா குழு
135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா,கல்வி,இசை,சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர கடவுள் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு திருப்பெருந்திரு.இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை தாங்கினார்.முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் குமாரசாமி வரவேற்று பேசினார்.விழாவில் தண்டபாணி சுவாமிகளின் நூல்களை பேரூராதீனம் தவத்திரு.சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்.பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார்,தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசு திருமடம் மௌன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார்,காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர்.
அதை தொடர்ந்து கல்வி, இசை, சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமி,அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல், ஐ.நா.சபை சிறப்பு தூதர் ராஜா பி.ஆறுமுகம்,மலேசிய நாட்டை சேர்ந்த டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், லண்டனை சேர்ந்த சிவ.தம்பு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணேஷ் குமார், வடவள்ளி திருப்புகழ் குழுவை சேர்ந்த வைத்தியநாதன், மற்றும் கௌமார மடாலயத்தை சேர்ந்த தவில்-நாதஸ்வர கலைஞர்களான கனகராஜ், கோவிந்தராஜ், மாணிக்கராஜ். கணேசன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் திருப்பெருந்திரு.இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில்,
135 ஆண்டுகளுக்கு முன் இராமானந்த சுவாமிகளால் தொடங்கப்பட்ட இந்த கௌமார மடாலயம் கொல்லாமை, புலால் உண்ணாமை,இறையன்பு,அறவொழுக்கம் ஆகிய நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
விழாவில் பிள்ளையப்பன்பாளையம் செல்வ நாயகி அம்மன் கோவில் தலைவர் செல்லப்பன்,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் (தொண்டாமுத்தூர்) ஆறுச்சாமி, குப்பனூர் பெருங்கருணை மாரியம்மன் கோவில், பரம்பரை அறங்காவலர் சதாசிவம், மாநில முருக பக்தர்கள் பேரவை செயலாளர் இராமமூர்த்தி, மரகதம் அம்மையார், கௌமார மடாலய நிர்வாகி இராமானந்தம் மற்றும் திருமடத்தின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து மாலையில் ரத யாத்திரை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் திருவுருவ சிலை வைக்கப்பட்டு சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ரதத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ரத யாத்திரை கௌமார மடாலயத்தை வந்தடைந்தது.இந்த நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.