January 6, 2026
தண்டோரா குழு
இன்று இந்திய இளைஞர்களின் சுற்றுலா பயண முடிவுகளை மாற்றும் ஒரு முக்கிய சக்தியாக இசை நிகழ்ச்சிகள் உருவெடுத்துள்ளன என்று ஏர்பிஎன்பி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏர்பிஎன்பி-ன் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியத் தலைவர் அமன்பிரீத் சிங் பஜாஜ் கூறுகையில்,
இதன் ஆய்வின்படி, இளம் தலைமுறையினர் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்காகவே தங்கள் பயணங்களை அதிகளவில் திட்டமிடுகிறார்கள் இந்திய இளைஞர்கள் பயணம் செய்யும் விதத்தையும், புதிய இடங்களைக் கண்டறிவதையும் இசை நிகழ்ச்சிகள்தான் இப்போது தீர்மானிக்கிறது. 2026-ம் ஆண்டில் இது இன்னும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சுமார் 62 சதவீத இளைஞர்கள் இசை நிகழ்ச்சிகளுக்காகவே பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இது இப்போதே அவர்களின் செயல்பாடுகளில் தெரிகிறது; மூன்றில் ஒருவர் அதாவது 36 சதவீதம் பேர், ஒரு நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்ட உடனேயே அதற்கான பயணத்தைத் திட்டமிடத் தொடங்கிவிடுகிறார்கள். வழக்கமாக விடுமுறை நாட்கள், நீண்ட வார இறுதி நாட்கள் அல்லது சீசனைப் பார்த்து பயணம் செய்யும் பழைய முறையை இவர்கள் பின்பற்றுவதில்லை. அதற்குப் பதிலாக புதிய அனுபவங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள்.
புதிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஒரு சிறப்பான தருணத்தில் பங்கேற்பதும்தான் இவர்களின் முக்கிய விருப்பமாக உள்ளது. இவர்களின் பயணங்களில் இசை நிகழ்ச்சிகள் எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இந்த ஆய்வு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. தங்களுக்குப் பிடித்த கலைஞர்களின் நேரடி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, அவர்கள் கடல்கடந்து செல்லவும் தயாராக இருக்கிறார்கள். 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
அமெரிக்காவிற்கு 48 சதவீதம் பேர், ஐரோப்பாவிற்கு 45 சதவீதம் பேர் மற்றும் ஆசியாவின் பிற நாடுகள் 46 சதவீதம் பேர் என எங்கு நிகழ்ச்சி நடந்தாலும் அங்கு செல்ல அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இசை நிகழ்ச்சிகளுக்கான இந்தப் பயணம் உள்ளூர் பொருளாதாரத்தையும் சுற்றுலாவையும் வளர்க்கிறது. கச்சேரிகள்தான் பயணத்தின் முக்கிய காரணமாக இருந்தாலும், கச்சேரி முடிந்த பின் அவர்கள் அந்த ஊரை சுற்றிப்பார்க்கத் தொடங்குகிறார்கள். மேலும் 65 சதவீத இளைஞர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகிலேயே தங்க விரும்புகிறார்கள்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 53 சதவீதம் பேர் கச்சேரி முடிந்த பிறகும் தங்கள் பயணத்தை நீட்டித்து அங்கேயே தங்குகிறார்கள். அவர்கள் உள்ளூர் உணவகங்கள், இரவு நேர கேளிக்கைகள் மற்றும் கலாச்சார இடங்களில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். 70 சதவீதம் பேர் நண்பர்களுடனோ அல்லது குழுவாகவோ செல்வதால், அவர்கள் செய்யும் செலவுகள் அந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பத்தில் ஆறு இளைஞர்கள், தங்கள் மாத வருமானத்தில் 21 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இதுபோன்ற இசைப் பயணங்களுக்காக செலவிடத் தயாராக உள்ளனர். பத்தில் ஒருவர் தங்கள் சம்பளத்தில் பாதியைக்கூட செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். சராசரியாக, இவர்கள் கடைசியாகச் சென்ற இசைப் பயணத்திற்கு தலா ரூ.51,000 வரை செலவு செய்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சியில் இசைச் சுற்றுலா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏர்பிஎன்பி கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 76 சதவீதம் பேர், ஒரு இசை நிகழ்ச்சி அல்லது திருவிழாவிற்காகவே முதன்முறையாக ஒரு நகரத்திற்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
இதன் மூலம், இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களுக்கு புதிய நகரங்களையும், சுற்றுலாத் தலங்களையும் மற்றும் கலாச்சாரப் பகுதிகளையும் அறிமுகப்படுத்துவது தெளிவாகிறது.” என்று தெரிவித்தார்.