September 8, 2018
தண்டோரா குழு
தொழில் வேறு அரசியல் வேறு நான் எனது பதவியை பயன்படுத்தி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் கோவை சுங்கம் பகுதியில் அதிமுகவின் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு சாலை விபத்துகள் குறைக்கப்பட்டு உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அம்மா ஒருவர் மட்டுமே 7 பேர் விடுதலை சம்பந்தமாக ஒரு நிலையை எடுத்தார்கள். பேரறிவாளனுக்கு 2 மாதம் ஜாமின் வழங்கியது எடப்பாடியர் தான். எழுபேர் விடுதலை குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றார்.
அப்போது அமைச்சர் வேலுமணி மீது பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட ஊழல் குற்றசாட்டு அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
அது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. எல்லாருமே தொழில் செய்கிறவர்கள் தான். திமுகவினரும் தான் தொழில் செய்து வருகின்றனர். அரசியல் வேறு தொழில் வேறு. அதில் குறிப்பிட்ட புள்ளி விவரம் தவறு. விதிமுறை மீறப்பட்டு உள்ளதா என்பதை தான் பார்க்க வேண்டும். நான் எனது பதவியை பயன்படுத்தி எதுவும் செய்ய வில்லை. நூற்றுக்கணக்கானோர் டெண்டர் எடுத்து பணி செய்து வருகின்றனர். திமுக செம்மொழி மாநாடு நடத்தியபோது இதே நிறுவனங்கள் தான் ஒப்பந்தபணியை எடுத்து இருந்தன. அவர்கள் தொழில் செய்து கொண்டே கட்சியில் உள்ளார்கள். செந்தில் அன் கோ 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
நான் நியாயம் கோரி 2 நாட்களில் அந்த தொலைக்காட்சி மீதும் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். ஒப்பந்தங்களில் விதிமுறை மீரப்படவில்லை. அந்த புள்ளி விவரம் தவறானது அதனால் தான் நீதிமன்றம் செல்ல உள்ளேன் எனக் கூறினார்.