September 25, 2018
தண்டோரா குழு
அதிமுக ஆட்சியில் பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் ஊழலை காண முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று தமிழக மாவட்டங்களில் அதிமுக-வின் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர் படுகொலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தான். இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள் சந்திக்கும் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். அதிமுக கட்சிக்காக யார் உழைத்தாலும் அவர்கள் உயர் பதவிக்கு வர முடியும். அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. எப்போதும் முதலமைச்சர் கனவில் உள்ளவர் ஸ்டாலின்; அவர் எப்போதும் கனவு மட்டுமே காண முடியும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா?
அதிமுக ஆட்சியில் பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் ஊழலை காண முடியாது. திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான மின்வெட்டு நீடித்த நிலையில் தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு, சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கவே இந்த கண்டன கூட்டம் நடைபெறுகிறது என முதல்வர் பேசினார்.