October 19, 2018
தண்டோரா குழு
கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சியில் ரூ.2 கோடி வர்த்தகமானதாக மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வாங்குவோர்-விற்பனையாளர் கண்காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது.கடந்த 3 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.28 அரங்குகளில் விசைத்தறியிலான சர்டிங்,சூட்டிங்,சேலைகள்,சுடிதார்,வேட்டிகள்,லுங்கிகள்,துண்டுகள்,திரைச்சீலைகள்,பள்ளி சீருடைகள்,வீட்டிற்கு தேவையான ஜவுளி என 100க்கும் மேற்பட்ட ஜவுளி ரகங்கள் விற்பனைப்படுத்தப்பட்டன.
ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஜவுளி வியாபாரிகள்,ஏற்றுமதியாளர்கள்,மொத்தமாக வாங்குபவர்கள் நேரடி சந்திப்பு ஏற்படுத்தி தங்களின் தொழிலை மேம்படுத்தி வருவாயை அதிகப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத்தின் திட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அரங்குகள் இலவசமாக வழங்கப்பட்டதால்,சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறுகின்றனர்.
மேலும்,கண்காட்சியில் ஒரு பகுதியாக கோவை,திருப்பூர்,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜவுளித்துறையில் பயிலும் மாணவர்களுக்கு விசைத்தறியில் தொழில்முனைவோர்களாவது தொழில் துவங்குவது,புதிய கண்டுபிடிப்புகள்,பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்,அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டது.