October 15, 2018
தண்டோரா குழு
சென்னையில் படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ்கபூரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பில் விருமாண்டி,எம்டன் மகன்,சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த சண்முகராஜன் மற்றும் நடிகர்,நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சீரியல் நடிகை ராணியும்,அவரது கணவர் பிரசாந்த் என்பவரும் செங்குன்றம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.அதில்,சீரியலில் தனக்கு கணவராக நடிக்கும் அந்த நடிகர்,காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாகவும் அந்த நடிகை கூறியுள்ளார்.
மேலும்,அடிப்பது போன்ற காட்சிகளில் தன்னை சண்முகராஜன் உண்மையிலேயே அடித்ததாகவும்,இதுகுறித்து கேட்டபோது தன்னையும்,தனது கணவரையும் சண்முகராஜன் தாக்கியதாகவும் அந்த நடிகை செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதன் அடிப்படையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த போலீசார்,நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ்கபூரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.