October 15, 2018
தண்டோரா குழு
அம்மா உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது.இங்கு உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுடன்,விலை குறைவாகவும் கிடைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கிடையில் சமீப காலமாக அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், அம்மா உணவகங்களில் கூட்டமும் குறையத் தொடங்கியது.
இந்நிலையில்,சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்துக்கு அதிகாரிகளுடன் சென்ற அவர்,திடீர் ஆய்வு நடத்தினார்.அங்கு சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கும் முறை,சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.பின்னர் தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி,
“தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும்.அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும்,அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை”.இவ்வாறு பேசினார்.