October 15, 2018
தண்டோரா குழு
மீடூ மூலம் பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீடூ மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.அந்த வகையில் பத்திரிகையில் பணியாற்றிய போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தம்மிடம் தவறாக நடந்ததாக மத்திய அமைச்சர் அகபர் மீது,பத்திரிகையாளர் பிரியா ரமணி மீடூ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர்.
இதனையடுத்து,வெளிநாட்டில் இருந்து டில்லி திரும்பிய மத்திய அமைச்சர் அக்பர் இது குறித்து விளக்கமளித்தார்.இதில் தான் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை.தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.அரசியல் நோக்கம் கொண்டவை.சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமைச்சர் அக்பர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில்,முதன் முதலாக தன் மீது அவதூறு பரப்பிய பிரியரமணி உள்ளிட்ட சிலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.