September 27, 2018
தண்டோரா குழு
அயோத்தியா வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் தான் பிரச்சனைக்கு காரணம்.ராமர் ஜென்மபூமி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள்.அதே சமயம் இஸ்லாமியர்கள்,இங்கு பல நூறு வருடமாக நாங்கள் மசூதி வைத்து வழிபட்டு கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
மசூதி இடிப்பிற்கு எதிராக 2002ல் அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும்,மீதமுள்ள பகுதி சன்னி வகுப்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து,இந்த வழக்கில் 1994ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மசூதி என்பது இஸ்லாமில் ஒரு அடிப்படை அங்கம் கிடையாது.இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகலாம்.இதனால் மசூதியை அத்தியாவசிய தேவை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியது.இந்த தீர்ப்பிற்கு எதிராக 1994ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது.
அதில்,அரசியல் சாசன அமர்வு தான் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும்.7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்தது.
இந்நிலையில்,இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,அசோக் பூஷண் ஆகியோர் இந்த வழக்கில் தங்களுக்கும்,நீதிபதி நசீருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.அயோத்தியா வழக்கில் 1994ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை.அனைத்து மதங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.
மசூதிகள் இஸ்லாம் மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதா?அயோத்தியா வழக்கை,அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை.3 நீதிபதிகள் கொண்ட அமர்வே சர்ச்சைக்குரிய அயோத்தியா இட விவகாரத்தை விசாரித்து தீர்ப்பளிக்கும்.சிவில் வழக்குகளில்,ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.அது குறித்த முந்தைய வழக்குகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனக்கூறினர்.
பின்னர் நீதிபதி நசீர் தனது தீர்ப்பில்,1994ல் வழக்கப்பட்ட எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.இதையடுத்து,இந்த வழக்கு அக்.29-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.