September 27, 2018
தண்டோரா குழு
வயது வந்த ஆண்- பெண் இடையே உள்ள கள்ள தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு
பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார்.ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.
இதற்கிடையில்,இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து,இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டத்திற்குள் பெண்களும் கொண்டுவரப்படுவார்களா அல்லது இந்த சட்டம் மொத்தமாக நீக்கப்படுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.அதில், இந்திய தண்டனை சட்ட பிரிவு-497 பெண்களின் வாழ்வுரிமையை பாதிக்கிறது.பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல, ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும்.தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.வயது வந்த ஆண் – பெண் இடையேயான கள்ளத் தொடர்ப்பு கிரிமினல் குற்றமாகாது.திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை எனக் கூறி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497-யை நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர்.