September 21, 2018
தண்டோரா குழு
என் மீது உடனடியாக வழக்குத் தொடர அமைச்சர் தங்கமணி தயாரா?ஓரு வாரத்தில் வழக்கு தொடராவிட்டால்,நான் அவர் மீது வழக்கு தொடர்வேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காற்றாலை மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதற்கு அமைச்சர் தங்கமணி,”எதிர்கட்சித் தலைவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் என்மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.தொடர்ந்து இவ்வாறு கூறி வந்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன்” என கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
“காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக நான் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணி இதுவரை பதிலளிக்கவில்லை.என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.ஆதாரம் என்னிடம் இருப்பதாலேயே நான் பேசுகிறேன்.அந்த ஆதாரம் தொடர்பாக விசாரிக்கும்படி நான் கூறி அதனை வெளியிட்டுளேன்.அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதற்காக என் மீது வழக்கு தொடர போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.ஆனால் இதுவரை வழக்கு தொடரவில்லை.நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்திற்குள் என் மீது வழக்கு தொடர வேண்டும்,இல்லையென்றால் நான் அவர் மீது வழக்கு தொடர்வேன்”.இவ்வாறு பேசினார்.