September 18, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்
கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து,பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 4 மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.
கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில்,அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமாகிருஷ்ணன் பங்கேற்றார்.மண்டல அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியும்,சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.கோவை மாநகராட்சி குடிநீரை வியாபாரம் செய்ய சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்திருப்பதாகவும்,இதனால் ஆயிரத்து 500 பொதுக்குழாய்கள் மூடப்படுவதோடு,குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரித்திருப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் குடிநீர் கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும்என மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறுவதாகவும்,ஒப்பந்தப்படி சூயஸ் நிறுவனம் வலியுறுத்தினால் கட்டணம் அதிகரிக்கும் என இருப்பதாக கூறிய அவர்,சூயஸ் நிறுவனத்தை விரட்டும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 326 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தவிர கோவை சிங்காநல்லூர்,குனியமுத்தூர்,ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.