September 18, 2018
தண்டோரா குழு
கோவையில் காரும்,இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை லக்ஷ்மி மில் சந்திப்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்விற்கு பயிற்சி பெற்று வந்தவர் பிரனேஷ்பாபு(27).இவர்,பந்தைய சாலை பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக வழக்கம் போல் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவினாசி சாலை சிட்ரா பகுதியிலிருந்து வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார் எதிரே வந்துள்ளது.இரு வாகனமும் நேருக்குநேர் மோதியதில்,இருசக்கர வாகனத்தில் வந்த பிரனேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரை ஓட்டிவந்தவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக பிரனேஷ்பாபு உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த பிரனேஷ்பாபு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி முத்துவீரன் என்பவருடைய மகன்.முத்துவீரன் கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஆணையர்,ஆட்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.