September 17, 2018
தண்டோரா குழு
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்..ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவாபள்ளிவாசல் கிராமத்திற்குட்பட்ட மெய்யபுரம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலையை தேவாலயம் உள்ள பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம், போலீசார், இந்து அறநிலையத்துறையை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்.
உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, நீதிமன்றம், போலீசாரை பற்றி அவதூறாக பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 18 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக ராஜசேகர் என்பவரும், காங்கிரசைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்பவரும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதனை ஏற்ற நீதிமன்றம், பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.