September 15, 2018
தண்டோரா குழு
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 17ம் தேதி திங்கட்கிழமை சுகுணா கல்யாண மண்டபத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழாவை ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய் பக்தர்கள் பேரவை ஆகியவை இணைந்து நடத்துக்கின்றன.
இதுகுறித்து சாய்பாபாபகாலனி நாகசாயி டிரஸ்ட் உபத்தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது,
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு மகா உற்சவ விழா தொடக்க நிகழ்ச்சி 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அப்போது ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி கோவை சாய்பாபா காலினியில் உள்ள சாய்பாபா கோவிலில் நடந்தது. இதில் பாபாவின் திருப்பாதுகையை சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஷீரடி சாய்பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா நிறைவிலும் 2வது முறையாக கோவைக்கு ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனத்திற்கு வர உள்ளது. இவ்வாறு பாபாவின் திருப்பாதுகை 2வது முறையாக ஒரு நகருக்கு வருவது என்பது இதுவே முதல்முறை. இது பாபாவின் ஆசியில் இந்த பாக்கியம் கோவை மக்களுக்கு கிடைத்துள்ளது.
ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனவிழாவிற்கு அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பாபாவின் பேரருள் பெற கேட்டுக் கொள்கிறோம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துள்ளோம். மேலும் முதியவர்கள். மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், காப்பகத்தில் உள்ளோம் ஆகியோர்கள் தரிசனம் பெற தனிவழி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள், 2, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், வழிகாட்டிகள், அறிவிப்புகள், முதலுதவி,ஆம்புலன்ஸ் வசதி, உதவி மையம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனம் விழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது நாகசாயி டிரஸ்ட் செயலாளர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர் சுகுமார், கே.ஜி டெனீம் குழுமத்தின் இயக்குனர் நிருபா ஸ்ரீராமலு, கமிட்டி நிர்வாகி மல்லிகை ராம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.