September 14, 2018
புழல் சிறையின் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதைப்போல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த வசதிகளை செய்துகொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் புழல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருக்கும் புகைப்பட காட்சிகளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுபற்றி விசாரிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி சிறைச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் சிறையில் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்டனர். அப்போது, தண்டனைப் பிரிவில் அனுமதியின்றி டிவி மற்றும் ரேடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 18 டிவிக்கள், 2 எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.