September 12, 2018
தண்டோரா குழு
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார்,ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில்,பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.அதேபோல் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில்,“கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை,பேராயர் மூலக்கல்,என்னை பலாத்காரம் செய்தார்.தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன்.பேராயர் மூலக்கலை நீக்க வேண்டும்.அவர் தனது செல்வாக்கையும்,பணபலத்தையும் பயன்படுத்தி,விசாரணையை முடக்க முயன்று வருகிறார்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா,அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.இதனையடுத்து, இன்று(செப்.,12) போலீசாரின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.வரும் 19ம் தேதி ஆஜராகும்படி பேராயருக்கு சம்மன் அனுப்புவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில், பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.பலாத்கார வழக்கு நாளை(செப்.,13) கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.