September 11, 2018
தண்டோரா குழு
குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன்,காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ்,உமாசங்கர் குப்தா,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் தரகர்கள் நந்தகுமார்,ராஜேஷ் ஆகிய 6 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து,கைதான 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டது. இந்நிலையில்,குட்கா ஊழல் வழக்கில் டி.எஸ்.பி. மன்னர் மன்னன்,காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.ஊழல் தொடர்பாக இருவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
மேலும்,குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் சமயத்தில், செங்குன்றம் சரக உதவி ஆணையராக மன்னர் மன்னன் பதவி வகித்தார்.செங்குன்றம் காவல் ஆய்வாளராக சம்பத் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.