September 10, 2018
தண்டோரா குழு
கோவை சிறுவாணி சாலையில் அமைந்துள்ள பேரூரில் கடந்த 1956 ம் ஆண்டு தமிழ் கல்லூரியை நிறுவியவர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார்.1925 ம் ஆண்டு பிறந்த அவர் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார்.மேலும் ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில் திருநெறிகளை நடத்தி தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.
பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார்(94)கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முழு ஓய்வில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பேரூர் சாந்தலிங்க மடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழலில் கடந்த வாரம் உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடல் மடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இளைய பட்டமாக இருந்த மருதாசல அடிகளார் இன்று முறைப்படி பெரிய பட்டமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்த விழாவில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உட்பட பல மடாலயங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.முன்னதாக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழுக்காக பேரூர் ஆதினம் பாடுபடும்,தமிழை வளர்க்க என்ன முயற்சிகள் பெரிய பட்டம் ராமசாமி அடிகளார் செய்தாரோ அதே வழியில் பாடு படுவோம் என தெரிவித்தார்.