September 3, 2018
தண்டோரா குழு
தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பிரச்சனையில் தமிழக அரசு நேரடியாக தலையீடக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(செப் 3)மனு அளித்தனர்.
தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி பழைய சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனைக் கண்டித்து கடந்த 20ம் தேதி முதல் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.மண்டல தொழிலாளர் ஆணையரின் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும்,நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும்,தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் சம்பள இழப்பும் ஏற்படுகிறது.
மேலும்,தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தில் பணிபுரியும்,தொழிலாளர்களின் நலன் கருதி,தமிழக அரசு நேரடியாக தலையீட்டு புதிய சம்பள ஓப்பந்தத்தை ஏற்படுத்தக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.