September 3, 2018
தண்டோரா குழு
கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கோவையில் இன்று கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி கண்புரை,கண்ணீர் அழுத்த நோய்,வயது மூப்பின் மூலம் ஏற்படும் பார்வை இழப்பிற்கு அடுத்தபடியாக முக்கிய பங்குவகிப்பது கருவிழியினால் உண்டாகும் பார்வை இழப்பாகும்.ஏறக்குறைய உலகளவில் 45 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இந்தியாவில் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சராசரியாக ஆண்டிற்கு 1,50,000 – 2,00,000 கண்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிலையில் 44,806 கருவிழிகள் மட்டுமே கிடைக்கிறது.
இதில் 40 % மட்டுமே பார்வை இழப்பை சரி செய்யபயன்படுகிறது மீதமுள்ள 60% கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக் குண்டான தரமுடையதாக இருப்பதில்லை. இதன் விளைவாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்நிலையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான போதிய கண்தானம் கிடைக்கப் பெறாமல் கரு விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுனர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.பல்வேறு தொண்டு நிறுவனங்கள்,அரசு துறைகள் போன்ற பலர் கண்தானத்தை ஊக்குவித்தாலும் இன்னமும் நமது தேவைக்கு குறைவாகவே கண்கள் கிடைக்கின்றது.
இதற்கிடையில்,மக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களிடையே கண்தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் கண்தான இரு வார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம்தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் கோவையில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த கண்தான விழிப்புணர்வு பேரணியை கோயமுத்தூர் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் (போக்கு வரத்து) சுஜித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் கோயம்புத்தூர் சொஸைட்டி.ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மருத்துவர்கள் ஹூமன்அனிமல் ஸ்சொஸைட்டி,கோயம்பத்தூர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்,அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் கண் வங்கி பணியாளர்கள் உட்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பேரணியில் ஹூமன்அனிமல் ஸ்சொஸைட்டி சார்பில் 10 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.இதில் கண் பார்வையற்ற ஒரு நாயும், கால்களை இழந்த ஒரு நாயும் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.