August 30, 2018
தண்டோரா குழு
அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி என சீத்தாராம் யெச்சூரி பேசியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்.மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,
கருணாநிதி பெண்களுக்கு சொத்துரிமை, சுய மரியாதை கிடைக்க பாடுபட்டவர். பெரியார், அண்ணா வழியில் நின்று கொள்கைகளை காத்தவர். மனிதநேயத்தை போற்றி வளர்த்தவர் கலைஞர். இந்தியாவின் பன்முகத் தன்மையை அளிக்கும் வகையில் கல்வியில் கூட ஒரே மத சித்தாந்தத்தை புகுத்தும் போக்கு நடந்து வருகிறது. இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டு இருந்தவர்களை உயர்நிலை படுத்தியவர். அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் கலைஞர் கருணாநிதி தான். மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாக தமிழகம் ஏற்காது. முற்போக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை நிலைநாட்ட முடியும். அதற்கு முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர்.
இவ்வாறு அவர் பேசினார்.