August 25, 2018
தண்டோரா குழு
கோவையில் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை , கமுதகுடி , காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவித ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 20 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து வருகின்றது.வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில் கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழக ஆலைகளில் பணிகள் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.