August 1, 2017 தண்டோரா குழு
ரஷ்யாவில் ஜூலை 29ம் தேதி முதல் நடைபெறும் ராணுவ போட்டியில் இந்தியா பங்கேற்கிறது.
கடந்த 2013ம் ஆண்டு முதல், சர்வதேச ராணுவ விளையாட்டின் ஒரு பகுதியாக இப்போட்டி ரஷ்யாவின் ஆலம்பினோ ரேஞ்ச்சில் நடைபெற்று வருகிறது. ரஷ்யா, பெலாரஸ், அசர்பைஜான், கசகஸ்தான், மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் இந்த சர்வதேச போட்டியில் சுமார் 28 விதமான போட்டிகள் நடைபெறும்.
இந்த சர்வதேச போட்டியில் நமது இந்திய ராணுவம் டி90 ரக ராணுவ பீரங்கி வண்டிகளுடன் அந்த போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
இந்த விளையாட்டு போட்டியில் சுமார் 19 நாடுகள் கலந்துக்கொள்கின்றனர். திறமையாக விளையாடும் 12 நாடுகள் இரண்டாம் சுற்றுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவற்றில் 4 நாடுகள் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக, நமது இந்திய ராணுவத்தினர் இந்த போட்டியில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த போட்டிக்காக, இந்தியாவிற்கு சொந்தமான டி90 ரக ராணுவ பீரங்கி வண்டிகள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரானுவத்தினர் அந்த பீரங்கி வண்டியை பயன்படுத்தி, போட்டியில் பங்கேற்பார்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.