July 21, 2017
தண்டோரா குழு
சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியினரின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, மர்செளின், பிரான்சின் டுமோளின் தம்பதி, ஆல்ப்ஸ் மலை பகுதியில், மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். அந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளனர். மாடு மேய்க்க சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய குழந்தைகளும் உறவினர்களும் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
ஆல்ப்ஸ் மலையின் பனி ஆறுகள் வற்றிய நிலையில் உள்ளது.இந்நிலையில் சன்ப்ளூரன் பனிபாறை அருகில் லெஸ் டேயேரேட்ஸ் என்னும் சுற்றுலா விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஊழியர் ஒருவர் பனி கட்டியில் இரண்டு சடலங்கள் இருப்பதை கவனித்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். அவர்கள் அங்கு வந்து அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.
“சடலம் கண்டுபிடித்த இடத்தில் ஒரு பை, கிண்ணங்கள், கண்ணாடி பாட்டில், மற்றும் காலணிகள், ஒரு புத்தகம் மற்றும் கை கடிகாரம் இருந்தது. புத்தகம், பை மற்றும் கை கடிகாரத்தை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அணிந்திருந்த உடைகள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடையாக இருந்தது. பனி புயலில் சிக்கி இறந்திருக்க கூடும். சடலங்களில் அடையாளங்களை சரியாக நிரூபிக்க, மரபணு சோதனை விரைவில் நடைபெறும்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.