July 3, 2017
தண்டோரா குழு
ஆன்லைன் மூலம் மணல் விற்பனைக்குகடந்த 2 நாட்களில் ஆன்லைன் மூலம் மணல் பெறுவதற்காக 18 ஆயிரத்து 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாகவும் மணல் லாரிக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ (www.tnsand.in) இணையதளத்தையும் (tnsand) செல்லிடைபேசி செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிவைத்தார்.
இதற்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது பற்றி லாரி உரிமையாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் மணல் அள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்யதொடங்கினர்.
அதன்படி, முதல் நாளன்று 14 ஆயிரத்து 897 லாரி உரிமையாளர்களும், பொதுமக்கள் சார்பில் 400 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதைபோல் இரண்டாவது நாளன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஆன்லைன் மணல் விற்பனைக்கு தமிழகத்தில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.