November 22, 2026
தண்டோரா குழு
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 2026-ம் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் தொடங்கிய விழாவில், நான்கு ஹவுஸ் அணிகளின் மாணவர்கள் மற்றும் என்சிசி விமானப்படை, கடற்படை பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர்.விழாவில் பேசிய டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ், வகுப்பறைக் கல்வி கோட்பாட்டு அறிவை வழங்கினாலும், விளையாட்டு மைதான அனுபவம் மாணவர்களுக்கு சரியான முடிவெடுக்கும் திறன், தலைமைத்துவம், விடாமுயற்சி மற்றும் குழு ஒற்றுமையை வளர்க்கிறது என்றார். தனது பள்ளிப் பருவ விளையாட்டு அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், விளையாட்டின் மூலம் பெற்ற வாழ்க்கைப் பாடங்களே தன்னை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
தனிநபர் விளையாட்டுகள் மன உறுதி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியையும், குழு விளையாட்டுகள் ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் விளையாடுவதற்கு பள்ளிகள் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 2027-ம் ஆண்டிற்குள் ஸ்டேன்ஸ் பள்ளி விளையாட்டு மைதானங்களை நவீனமயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தடகள ஓடுதளம் புதுப்பிக்கப்படுவதுடன், தொடர்ந்து ஹாக்கி, கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கல்வியுடன் விளையாட்டையும் இணைத்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஸ்டேன்ஸ் பள்ளியின் விளையாட்டு விழா அமைந்தது.