November 9, 2026
தண்டோரா குழு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஈஷா சார்பில் பழங்குடி குழந்தைகளுக்குப் புத்தாடைகளும்,பழங்குடி மக்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகளும் வழங்கப்பட்டன.
கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தானிக்கண்டி,மடக்காடு,கொளத்தேரி, பட்டியார்கோவில்பதி,முள்ளங்காடு, கரும்புக்காடு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 200 – க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஈஷா தன்னார்வலர்கள் புத்தாடைகளை வழங்கித் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக காந்தி காலனி,நொய்யல் நகர், ராஜீவ் காலனி, இருட்டுப்பள்ளம், செம்மேடு,முட்டத்துவயல், பெருமாள்கோவில்பதி, பச்சினாம்பதி ,மூங்கில்மடைகுட்டை உள்ளிட்ட 25 – க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று 2,500 குடும்பங்களுக்கு இனிப்புகளும் , 500 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பட்டாசுகளும் வழங்கினர்.
ஈஷா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.இத்துடன் ஈஷா சார்பில் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை,போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன.இதன் மூலமாகப் பல பழங்குடி மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக உருவாகி பணிவாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் மூலம் அடிப்படை மற்றும் மேல்சிகிச்சைகளும் யோகப் பயிற்சிகளும் பழங்குடி கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.