October 24, 2026
தண்டோரா குழு
2026 ஆம் ஆண்டிற்கான சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.
முதல் நாளிலேயே மழை, தடைபட்ட போட்டிகள் மற்றும் நூலிழையில் வெற்றிகளை தவறவிட்ட பல போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடந்தன.எல்ஜிபி பார்முலா 4: மழையால் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் ஆர்யா சிங் அபார வெற்றி பெற்றார். ராகுல் ரங்கசாமி இரண்டாம் இடத்தையும், அறிமுக வீரர் ஆதித்யா பட்நாயக் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதலில் முன்னிலையில் இருந்த மெகுல் அகர்வால், இறுதி நேரத்தில் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை: அமெச்சூர் பிரிவில் கபீர் சஹோச் தான் பங்கேற்ற இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தினார். ப்ரோ பிரிவில் செந்தில் குமார் முதல் ரேஸிலும், நவநீத் குமார் இரண்டாவது ரேஸிலும் வெற்றி பெற்றனர்.ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை: ஜென்டில்மேன் பிரிவில் பிரதீக் சோனாவனே எளிதாக வெற்றி பெற்றார். மீரா எர்டா 8-வது இடத்திலிருந்து முன்னேறி ஒட்டுமொத்தமாக 3-வது இடத்தைப் பிடித்து அசத்தினார். ஆதம் ஜுனைத் ரூக்கி பிரிவில் வெற்றி பெற்றார்.
சூப்பர் சலூன் கார்கள்: இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பிரிவில் அர்ஜுன் நரேந்திரனும், இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவில் அமன் நாக்தேவும் வெற்றி பெற்றனர். ஜூனியர் பிரிவில் தீபக் ரவிக்குமாரும், சூப்பர் ஸ்டாக் பிரிவில் தில்ஜித் டி.எஸ்-சும் முதலிடம் பிடித்தனர்.F1300 நோவிஸ் கோப்பை: பெரும் குழப்பங்களுக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில் ஷத்வீர் ஷெட்டி மிக எளிதாக வெற்றி பெற்றார்.
ஆரம்பத்திலேயே பல கார்கள் மோதிக்கொண்டதால் 9 வீரர்கள் போட்டியை முழுமையாக முடிக்கவில்லை. அகஸ்டின் பாபி இரண்டாவது இடத்தையும், ஆதம் ஜுனைத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.