October 22, 2026
தண்டோரா குழு
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக குணப்படுத்தலாம். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறக்கின்றனர். ஆனால், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் 90% மார்பக புற்றுநோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கேஎம்சிஹெச்,புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவில் சிறப்பு விழ்ப்புணர்வு நிகழ்ச்சிக்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கையெழுத்து இயக்கத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தது
கோயமுத்தூர் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி. சரஸ்வதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் N. பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும்,நோயை வெல்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடவும், முக்கிய பிரமுகர்களுடன் மருத்துவமனை மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பிங்க் நிறம் மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் குறிக்கிறது; மேலும் பிங்க் ரிப்பன் என்பது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வின் சர்வதேச அடையாளமாகும். செம்மொழிப் பூங்கா முழுவதுமே பிங்க் வண்ணத்தில் ஒளிர்வதை நூற்றுக்கணக்கானோர் ஆரவாரத்துடன் உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
கேஎம்சிஹெச் மார்பகப் புற்றுநோய் மையம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு 2013 முதல் முழுமையான மார்பக பராமரிப்பு மையமாகச் சேவை செய்து வருகிறது. ஆலோசனை வழங்குவது முதல் பரிசோதனை, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வரை, உலகத் தரம் வாய்ந்த சிறந்த நிபுணர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் இங்கு ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. உலகின் தலைசிறந்த 3டி மேமோகிராபி, அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவிகள், 3டி எம்ஆர்ஐ மற்றும் பிற நவீன ஸ்கேனிங் கருவிகளுடன் இயங்கும் இம்மையம், தழும்பில்லாத பல்வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்வதில் பெயர் பெற்றது.
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி “மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான நமது வலிமையான ஆயுதம் அதை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான். இந்த கையெழுத்து இயக்கம் மற்றும் எங்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு முயற்சிகள் மூலம், இந்நோய் குறித்த பயத்தைப் போக்கி, ஒவ்வொரு பெண்ணும் வழக்கமான பரிசோதனைகளுக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று கூறினார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் N பழனிசாமி”கேஎம்சிஹெச்சில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அரவணைப்பான சிகிச்சையை ஒரே கூரையின் கீழ் வழங்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். எங்கள் மார்பக மையம் நவீன தொழில்நுட்பங்களையும் சிறந்த நிபுணர்களையும் ஒன்றிணைத்து, நோயாளிகளுக்கு பரிசோதனை முதல் முழு குணமடைவது வரை உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கிறது” என்று தெரிவித்தார்.