October 4, 2026
தண்டோரா குழு
கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் தனது கோவை ராம்நகர் சிட்டி சென்டர் மருத்துவமனையின் 34-வது ஆண்டு விழாவையும்,சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப்பின் 33-வது ஆண்டு விழாவும் அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடியது. இந்த கிளப்பில் 60 முதல் 90 வயது வரை உள்ள 400-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்கள் வருடம் ஒருமுறை ஆண்டு விழா சமயம் சந்தித்துக் கொள்வர்.கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இவர்களுக்கு என்று ஒரு பிரத்தியேக உதவி மையம் செயல்படுகிறது மற்றும் வாட்ஸ் அப் குரூப்பும் உள்ளது.
கேஎம்சிஹெச் ராம்நகர் சிட்டி சென்டரில் 24 மணி நேர இருதயம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை, சிறப்பு மருத்துவர் ஆலோசனை, மாஸ்டர் ஹெல்த் செக்கப், கேத்லேப், டிஎம்டி, அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, இசிஜி, டயாலிசிஸ் மற்றும் அனைத்து ஆய்வக சேவைகள் உள்ளன.
ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.கோவை வடக்கு மாநகரின் துணை காவல் ஆணையாளர் டாக்டர் பி. தங்கதுரை IPS அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மூத்த குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சைபர் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஸ்ரீநிதி நித்யானந்த் அவர்கள் முதியோர்களின் உடலநலம் மற்றும் மனநலம் சார்ந்த சவால்களை கையாள்வது பற்றி உரை நிகழ்த்தினார்.சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹரிஹரன் அவர்கள் கிளப் நடவடிக்கைகள் குறித்த வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவில் உரை நிகழ்த்திய டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, மூத்த குடிமக்கள் தங்கள் உடல் நலனை நன்கு பேணி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஹெல்த் கிளப் துவக்கப்பட்டது என்று கூறினார். அதற்காக அவர்களுக்கு உணவு, உடற்பயிற்சி முதலான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
கேஎம்சிஹெச் மருத்துவமனை எடுக்கும் முன்முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் மூத்த குடிமக்களுக்கு அவர் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். ஆண்டு விழா கொண்டாடும் தருணத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கேஎம்சிஹெச் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர். அருண் பழனிசாமி கூறியதாவது:
முதியவர்கள் உடல்நலத்துடன் சுறுசுறுப்பாக வாழ வழிசெய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும் அதற்கேற்ப உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த ஆலோசனைகளுடன், சலுகைக் கட்டணத்தில் மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறோம். எங்களது இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு, கேஎம்சிஹெச் சிட்டி சென்டர் வசதிகளைத் தொடர்ந்து பயன்படுத்திவரும் முதியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நமது 34-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் நமது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கேஎம்சிஹெச் சிட்டி சென்டர் பொது மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஷ்ணுவர்தன் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.