September 20, 2026
தண்டோரா குழு
2,250 படுக்கைகள் கொண்ட முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச்,கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது. புதிய தொழில் நுட்பங்களையும், அதிநவீன சிகிச்சை வசதிகளையும் நோயாளிகளின் நலனுக்காக அறிமுகப்படுத்துவதில் இம்மருத்துவமனை எப்போதும் முன்னணியில் உள்ளது.
தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.பழனிசாமியின் கருத்துப்படி, மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வெளியிடப்படும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. ஆனால், தொற்று ம், தொற்றா நோய்களின் சுமையைக் கருத்தில் கொண்டால், இந்தியாவில் சுகாதார ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது
நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் எத்தனை பேர்களுக்கு இருக்கின்றன என்பதைப் தெரிந்துகொள்ள, கேஎம்சிஹெச் மருத்துவமனை 2015-ல் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியது. இந்த மையத்தின் முக்கிய திட்டமான கேஎம்சிஹெச் தொற்றா நோய்கள் ஆய்வு (Non Communicable Diseases), கிராமம், சிற்றூர், நகரம் ஆகிய மூன்று வகையான பகுதிகளிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக (2015–2026) மக்களைத் தொடர்ந்து கண்காணித்தது. “முன்கூட்டியே கண்டறிவது, நோய் வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, நோயைத் தடுப்பது”. என்ற நோக்கத்துடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பத்து ஆண்டு கால கண்காணிப்பில் ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது: உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 43.1 சதவீதத்திலிருந்து 57.0 சதவீதமாக உயர்ந்துள்ளது; பெண்களிடையே (63.3%) மற்றும் 20-40 வயது இளைஞர்களிடையே (61.4%) இது இன்னும் அதிகம். இரத்த அழுத்தமும், நீரிழிவும் இதே போல் உயர்ந்துள்ளன. உடல் பருமன், அதிக இரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து ஏற்றத்தாழ்வு ஆகியவை ஒன்றுசேர்ந்து வருவதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. இது எந்த அறிகுறியும் இல்லாமலேயே இரத்த நாளங்களைப் பாதிக்கிறது; அறிகுறியே இல்லாத பலரிடம் இதய தமனி அடைப்பும் கண்டறியப்பட்டது. இதனுடன் இரத்தசோகையும் இருப்பது , ஒரே நேரத்தில் இரண்டு வகையான உடல்நல பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்வதைக் காட்டுகிறது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நபர்களை ஆண்டுதோறும் கண்காணித்துப் பார்த்ததில் ஆரோக்கியமாக இருந்த மூன்று நபர்களில் ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருக்கிறது; சர்க்கரை அளவு சாதாரணமாக இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது அல்லது சர்க்கரை நோய் வரக்கூடிய நிலையில் இருந்தனர். ஆரோக்கியமான எடையில் இருந்த மூன்று நபர்களில் ஒருவருக்கு மேல் உடல் எடை கூடியது; ஐந்தில் ஒருவருக்கு தமனிகளில் ஆரம்பநிலை பாதிப்பு தென்பட்டது; நான்கில் ஒருவருக்கு மேல் இரத்தசோகை இருக்கிறது. இவை அனைத்தும், நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே சிறந்த வழி என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், சர்வதேச அளவில் ஒத்துழைப்பை வளர்க்கவும், கிராமப்புற பொது சுகாதாரம் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான 3-வது சர்வதேச மாநாட்டை கேஎம்சிஹெச் நடத்தியது. இது செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில், கோயம்புத்தூர் காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியா முழுவதிலுமிருந்தும் வந்த நிபுணர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர். தவமணி தேவி பழனிசாமி இளம் ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டது.
மாநாட்டைத் தொடங்கி வைத்த கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர். நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில்,
“இந்நாட்டில் எந்த விதமான நோய்கள் எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பதை அறிய இந்த ஆய்வு உதவும் என்பதை விளக்கினார் மேலும் அரசு கொள்கைகளை வகுப்பதற்கும், பொது சுகாதார திட்டமிடலுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
சிறப்புரை ஆற்றிய கேஎம்சிஹெச் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர். அருண் பழனிசாமி, “ஆரம்பநிலை அறிகுறிகளையும், குறிப்பிட்ட ஆபத்து காரணிகளையும் கண்டறிவதன் மூலம், கிராமம், சிற்றூர், நகரம் என இந்தியா முழுவதும் உள்ள எதிர்கால தலைமுறையினரைப் பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட இலக்கை நோக்கிய, தொலைநோக்கு அடிப்படையிலான நடவடிக்கைகளை உருவாக்க முடியும்” என்று கூறினார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன், “ஒரு மருத்துவராக, நோய் கண்டறியப்படும் முன்பே அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதை நான் அன்றாடம் பார்க்கிறேன். முன்கூட்டியே பரிசோதனை செய்வது இன்றியமையாதது என்பதை இந்த பத்தாண்டு ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று கருத்து தெரிவித்தார்.