September 9, 2026
தண்டோரா குழு
கோவையில் 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ‘Hit Learn’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கற்றல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனது சொந்த கற்றல் அனுபவத்தில் ஏற்பட்ட சிரமத்தை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கியுள்ளதாக மாணவன் ஹரிஹரன் தெரிவித்தார்.
கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் தனக்கு, 8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள Home Ideas Technologies நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.
அப்போது,படிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெற முடியாதது, அதற்காக டியூஷன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளிட்ட சிக்கல்களை தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்ததாக கூறினார்.
“சந்தேகம் ஏற்படும் நேரத்திலேயே கேட்டு, உடனடியாக விளக்கம் பெறக்கூடிய ஒரு AI இருந்தால் எப்படி இருக்கும்?” என்ற சிந்தனையில் இருந்து இந்த செயலியை உருவாக்கும் யோசனை உருவானதாக தெரிவித்தார்.
தனது யோசனையை அடிப்படையாகக் கொண்டு, தான் கோடிங் கற்ற நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியதாகவும், செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான தனது கருத்துகளை வழங்கி, ஒரு யோசனை எவ்வாறு தொழில்நுட்பத் தயாரிப்பாக மாறுகிறது என்பதற்கான செயல்முறையிலும் பங்கேற்றதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார்.
‘Hit Learn’ செயலியின் முக்கிய அம்சங்கள்:
வகுப்பைத் தேர்வு செய்து கற்றல், வீடியோக்களைப் பார்க்கும் வசதி,
குரல் மூலம் சந்தேகங்களை கேட்டு AI உதவியுடன் விளக்கம் பெறும் வசதி,
Voice-to-Voice கேள்வி–பதில்
பல்மொழி ஆதரவு,
AI அடிப்படையிலான தனிப்பயன் கற்றல்,
வினாடி வினா மற்றும் புதிர்கள்
ஊடாடும் மதிப்பீடுகள்
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்கும் வசதி,மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை கற்றுக்கொண்டு, புரியாதவற்றை உடனடியாகக் கேட்டு விளக்கம் பெறுவதற்கு இந்த செயலி உதவும் என்றும், இது மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்ப்பதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார்.