• Download mobile app
20 Aug 2026, ThursdayEdition - 3844
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கூல் கான்க்ளேவ் 3.0 – 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

August 20, 2026 தண்டோரா குழு

இந்தியாவில் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘Cool Conclave 3.0 – Decarbonising the Built Environment’ என்ற சர்வதேச மாநாடு கோவையில் இன்று தொடங்கியது.

இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் அண்ட் ஏர்கண்டிஷனிங் எஞ்சினியர்ஸ் (ISHRAE) சார்பில் ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்கள் கோவை ஹோட்டல் மெர்லீஸ் வளாகத்தில் மாநாடு நடைபெறுகிறது.25,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், நாடு முழுவதும் 57 கிளைகளையும் கொண்ட ISHRAE அமைப்பின் சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.

கோவை தொழில் முனைவோர், பொறியியல் திறன் மற்றும் புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளின் முக்கிய மையமாக விளங்குவதால், இம்மாநாட்டை கோவையில் நடத்துவதாக ISHRAE தெரிவித்துள்ளது.
மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் டீ-கார்பனைசிங், பசுமை கட்டிடங்கள், ஆற்றல் திறன் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்கும் தனிப்பட்ட வட்டமேசை ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெறுகின்றன.

டீ-கார்பனைசிங் குறித்து ISHRAE தலைவர் டாக்டர் சரவணன் கூறுகையில்,

“மக்கள் வசிக்கும் கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் கருவிகளிலிருந்து வெளியாகும் கரியமில வாயு உமிழ்வு உலகளவில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவது புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிப்பதால், பூமியில் இருந்து வெளியேறும் வெப்பம் வளிமண்டலத்தில் சிக்கி வெப்பநிலை உயர்வு ஏற்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் உருவாகின்றன.

எனவே, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது தொடர்பாக பொதுமக்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் முடிவெடுப்போருக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்” என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைக் கட்டிட வடிவமைப்பு,நீர் மேலாண்மை, திறமையான உள்கட்டமைப்பு,மின்சார சிக்கனம், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் குறைந்த மின்செலவில் அதிக திறனுடன் செயல்படும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.

பயன்படுத்துவோரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து, இந்தியா முழுவதும் நிகர பூஜ்ய ஆற்றல் (Net Zero Energy) இலக்கை நோக்கி முன்னேறுவதே ISHRAE-யின் முக்கிய குறிக்கோளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோடியாக,கோவையை அடுத்த காந்தவயல் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியின மாணவர் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளிக்கு 100 சதவீதம் சூரிய மின்சாரத்தில் இயங்கும் சோலார் மின் அமைப்பை ISHRAE இலவசமாக வழங்கி பொருத்தியுள்ளது.இந்த சோலார் மின் அமைப்பு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பள்ளியின் தினசரி மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பு (Grid) மூலம் அரசு மின் துறைக்கு வழங்கும் வாய்ப்பும் இந்த அமைப்பில் உள்ளது.

இதேபோல்,இந்தியா முழுவதும் உள்ள ISHRAE கிளைகள் மூலம் தகுதியுள்ள பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு இலவசமாக சோலார் மின் இணைப்புகளை வழங்கி பொருத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Cooling a Warming India’ கையேடு வெளியீடு

சிங்கப்பூரைச் சேர்ந்த Deloitte நிறுவனமும் ISHRAE அமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள ‘Cooling a Warming India’ என்ற தலைப்பிலான தகவல் கையேடும் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.மேலும், இந்திய பசுமைக் கட்டிடங்கள் சான்றளிப்பு அமைப்பான IGBC (Indian Green Building Council) சார்பில் கட்டிடங்களை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் தொடர்பான பயிற்சி மற்றும் செயலாக்க வழிகாட்டு நூலும் வெளியிடப்படுகிறது.

கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கும் முறைகள், தர நிர்ணயங்கள் மற்றும் புதிய கோட்பாடுகள் அடங்கிய மற்றொரு முக்கிய நூலும் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
80-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆதரவு
கூல் கான்க்ளேவ் 3.0 மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 80-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மாநாட்டிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

பசுமையான கட்டிடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆற்றல் திறன் மற்றும் கார்பன் உமிழ்வு குறைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க