August 6, 2026
தண்டோரா குழு
பெண்களின் கல்வி மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் (PSGRKCW), 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா கல்லூரியின் முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவியர்களின் தலைமைத்திறன், சமூகப் பொறுப்பு, ஒற்றுமை மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இறை வணக்கத்துடன் தொடங்கி,குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுடன் துவங்கியது.
ஜி.ஆர்.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நந்தினி வரவேற்புரையாற்றி,மாணவர் மன்றத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.தலைமைத்திறன், ஒழுக்கம், பொறுப்புணர்வு,குழுப்பணி மற்றும் சமூகப் பங்களிப்பை வளர்த்துக்கொள்ள மாணவியர்களை அவர் ஊக்குவித்தார். மேலும்,கல்லூரி வழங்கும் பல்வேறு வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி தங்களது திறமைகளை மேம்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து,கல்லூரி முதல்வர் முனைவர் பி. பி.ஹாரதி தலைமையில் மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.கல்லூரியின் உயரிய பண்புகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றி, நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்படும் குடிமக்களாக திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட Veranda Learning Solutions Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவக்குமார் கணேசன் சிறப்புரையாற்றினார். இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு, புதுமை சிந்தனை மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு,வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தன்னம்பிக்கையுடன் தயாராக இருக்குமாறு மாணவியர்களை அவர் ஊக்குவித்தார். தலைமைத்திறன், தகவல் பரிமாற்றத் திறன்,விமர்சன சிந்தனை மற்றும் நெறிமுறைகள் தொழில்வாழ்வில் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக,மாணவர் மன்றத்தலைவர் ஜெய்சிகா வர்ஷினி கே.நன்றியுரை வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகம், விருந்தினர்கள்,பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவியர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. இந்த மாணவர் மன்றத் தொடக்க விழா, மாணவியர்களிடையே தலைமைத்திறன், ஒற்றுமை, பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் சிறப்பான துவக்கமாக அமைந்தது.