July 25, 2026
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம்,பெருமாநல்லூரில் வசித்து வரும் தமிழ்செல்வன் ஜோதிமணி அவர்களின் மகன் குணசீலன், 24வயதுடைய வாலிபர்,இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 15.07.2026ஆம் தேதி காலை 10.45மணிக்கு உணவு உண்ணும்பொழுது புரையேறி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 21.07.2026-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தமிழ்செல்வன் ஜோதிமணி மகன் குணசீலன்,அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் & காவல்துறை அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள்,கண்கள்,எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும்,கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில்,
மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.குணசீலன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.