June 25, 2026
தண்டோரா குழு
சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (25/06/2026) வேலூரில் நடைபெற்றது.இதில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில்,
“இன்றைய காலகட்டத்தில் நஞ்சில்லாத உணவு உற்பத்தியும், விவசாயிகளின் பொருளாதார தற்சார்பும் மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரை இந்த மாபெரும் கருத்தரங்கில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதோடு, அவற்றை வணிக ரீதியாக எப்படி லாபகரமாக மாற்றுவது என்பதை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்த நிகழ்வு அமையும்” எனக் கூறினார்.
இந்த மாபெரும் திருவிழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் தலைமை தாங்கி விழா தலைமையுரை ஆற்றுகிறார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் சேகர் விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. துசார் கந்தி பேஹேரா மற்றும் வேலூர் வி.ஐ.டி விவசாய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளியின் துறைத்தலைவர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல்
இயற்கை விவசாயத்தில் செலவை குறைத்து தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை விவசாயிகளுக்கு வழங்கும் விதத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் நிபுணர்களின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு அமையவுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்கும் நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர்.
புதுடெல்லி மத்திய அரசின் வேளாண் விரிவாக்கத் துறை இணை இயக்குநர், முன்னோடி பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான எளிய தீர்வுகள் குறித்து விளக்குகிறார்.
சென்னை ‘தான்யம் ஆர்கானிக் சூப்பர் ஸ்டோர்’ நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கே. மதுசூதனன், இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் முறைகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து பேசுகிறார்.
சென்னையைச் சேர்ந்த ஐடி துறையின் முன்னாள் ஊழியரும் இயற்கை விவசாயியுமான ஜனா சிவதாணு, கீரை சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டிய தனது வெற்றிப் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.
வேலூரைச் சேர்ந்த ‘தாய்மண் இயற்கையகம்’ பிரதீப் குமார், 800-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களை பாதுகாத்து வரும் தனது அனுபவங்களையும், விதை தற்சார்பு குறித்து வழிகாட்டுகிறார்.
ஈரோட்டைச் சேர்ந்த ‘ஹூகா சீட் கீப்பர்ஸ் கலெக்டிவ்’ நிறுவனர் சௌமியா, பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தலின் அவசியம் குறித்து எடுத்துரைக்கிறார்.
பெங்களூரு ‘இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின்’ முதன்மை விஞ்ஞானி முனைவர் வி. சங்கர், காய்கறி சாகுபடியின் நவீன மற்றும் இயற்கை வழி தொழில்நுட்பங்கள் குறித்தும், அதே நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் எஸ். புவனேஸ்வரி, காய்கறிகளை பதப்படுத்துதல், சேமிப்பு, பேக்கேஜிங் மற்றும் மதிப்புக்கூட்டல் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
உடுமலையைச் சேர்ந்த ‘மரபு வாழ்வியல் வழிகாட்டி’ முனைவர் அகரம் அப்துல் கலாம், காய்கறி மற்றும் கீரைகளின் மருத்துவ குணங்கள், உணவை மருந்தாக்கும் அறிவியல் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை ‘இந்திரா கார்டன்ஸ் நிறுவனர்’ மைத்ரேயன், பெருநகரங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான எளிய வழிமுறைகளை விளக்குகிறார்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த ‘மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின்’ விதை பாதுகாவலர் மணிகண்டன், 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களை உற்பத்தி செய்து அதிக விளைச்சல் மற்றும் லாபம் பெறும் முறைகளை பகிர்ந்து கொள்கிறார்.
வேலூர் ‘அகழ்நிலம் இயற்கை பண்ணையின்’ யுவராஜ், தாம் மீட்டெடுத்த 90-க்கும் மேற்பட்ட அரிய கிழங்கு ரகங்களின் மகத்துவம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து விளக்குகிறார்.
கண்காட்சி
பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. இதில் காய்கறி மற்றும் கிழங்கு விதை பாதுகாவலர்கள், இயற்கை விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்டோரின் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
விதை பாதுகாவலர் விருதுகள் – 2026
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வரும் முன்னோடி விதை பாதுகாவலர்களை கௌரவிக்கும் வகையில், ‘விதைத்தீவு பிரியா ராஜநாராயணன்’ அவர்களின் ஒருங்கிணைப்பில் “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரிய பாரம்பரிய விதைகளை சேகரித்து, பாதுகாத்து, பரவலாக்கி வரும் சுமார் 10 முன்னோடி விதை பாதுகாவலர்கள் இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்த மாபெரும் திருவிழாவில் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இத்திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 83000 93777