June 24, 2026
தண்டோரா குழு
காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோயம்புத்தூரில் தனது முதல் வணிக அலுவலகத் திட்டமான ‘காசாகிராண்டு கிரவுன்’வளாகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரின் முக்கிய வணிக மையமாக உருவெடுத்து வரும் அவிநாசி சாலையில் அமைந்துள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த அலுவலக வளாகம், சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப (IT), ஐடிஇஎஸ் (ITES), உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கோ-வொர்க்கிங் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலக வளாகம் முழுமையாக IndiQube நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பது, கோயம்புத்தூரில் உயர்தர அலுவலக இடங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
நவீன கட்டிடக்கலை, திறன்மிக்க தள அமைப்புகள், நிலைத்தன்மை கொண்ட உட்கட்டமைப்பு, பொதுப் பயன்பாட்டு சிற்றுண்டிச் சாலை மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட பல்வேறு வசதிகளுடன் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்,கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுடன் சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து காசாகிராண்டு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் சிவசங்கர் ரெட்டி கூறுகையில்,
“தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் எங்களது முதல் வணிகத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘காசாகிராண்டு கிரவுன்’ மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தரமான அலுவலகச் சூழலை உருவாக்குவதோடு, கோயம்புத்தூரின் வணிக வளர்ச்சிக்கும் பங்களிக்க விரும்புகிறோம்,” என்றார்.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காசாகிராண்டு கமர்ஷியல், தற்போது அலுவலக மற்றும் ரீடெயில் வளாகங்கள் உள்ளிட்ட 40 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல முக்கிய வணிகத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள நிலையில், கோயம்புத்தூரில் அதன் வருகை நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.