June 21, 2026
தண்டோரா குழு
சிறுத்துளி, கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. குழுமம் இணைந்து காந்திமா நகர் ஓடை சீரமைப்பு திட்டத்தைத் தொடங்கியது – “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுத்துளி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது. நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” (Watch Your Waste) என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.06.2026) ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.
ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நீர்மாசுபாட்டால் ஏற்படும் நீர்தரக் குறைவு, துர்நாற்றம், நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கிரி பிரசாத், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா,பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.
காந்திமா நகர் ஓடையை பாதுகாப்பது என்பது ஒரு ஓடை சீரமைப்புத் திட்டம் மட்டுமல்ல; கோயம்புத்தூரின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலையான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு மக்கள் இயக்கமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.