June 21, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் (சிடிடிஏ) சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாரதியார் அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னாள் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் புகழ்பெற்ற டென்னிஸ் நிர்வாகி கே.ஜி.ரமேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
1977-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டேவிஸ் கோப்பை போட்டியைத் தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி, இந்த ஆண்டுடன் தொடர்ந்து 48-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. நாட்டிலேயே நீண்டகாலமாக நடைபெறும் மிகப்பெரிய மாவட்ட அளவிலான டென்னிஸ் லீக் போட்டிகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. 2026-ஆம் ஆண்டுக்கான போட்டியில் 11 பிரிவுகளில் 116 அணிகள் பங்கேற்றதுடன், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 1,117 வீரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி, இப்பகுதியின் முக்கியமான டென்னிஸ் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விளையாட்டு போட்டிகள் கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை கோவையில் பல இடங்களில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை மாவட்ட டென்னிஸ் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
விழாவில் பேசிய சங்கச் செயலர் எம்.சதீஷ் குமார் நாயர்,
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். 2024-ஆம் ஆண்டில் 109 அணிகளாக இருந்த பங்கேற்பு, 2025-ஆம் ஆண்டில் 111 அணிகளாகவும், 2026-ஆம் ஆண்டில் 116 அணிகளாகவும் உயர்ந்திருப்பது விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதற்கான சான்றாகும் என்றார்.
கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அங்கீகாரம் பெற்ற ஏழு போட்டிகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு போட்டிகளுக்கு சிடிடிஏ நேரடி ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பதிவு செய்யப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் ஏஐடிஏ அங்கீகாரம் பெற்ற போட்டிகள் நடத்தப்படுவதற்கும் சங்கம் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கூறினார்.
எதிர்கால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, போட்டி திட்டமிடல், போட்டி வடிவமைப்பு, திறமையான வீரர்களை அடையாளம் காணுதல், வீரர் மேம்பாடு, பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான பயிற்சி, நிதி ஆதரவு வாய்ப்புகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் போட்டி, நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக் குழு (டி.சி.டி.சி.) அமைக்கப்படுவதாக சங்கம் அறிவித்தது. மேலும், சிடிடிஏ ஓபன் லீக், சிடிடிஏ மாவட்ட லீக் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூத்தோர் மாஸ்டர்ஸ் லீக் ஆகிய புதிய தொடர்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் சீனிவாசன், 1970-களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சிடிடிஏ, தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் டென்னிஸ் விளையாட்டை வளர்ப்பதில் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அதன் முயற்சிகளால் கே.ஜி. ரமேஷ், நிருபமா வைத்தியநாதன், ஸ்ரீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி-முருகேசன் மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி உள்ளிட்ட பல்வேறு சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு :-
ஏ டிவிசன் போட்டியில் சிசிடிஏ அணியின் திரு. கௌதம் மற்றும் குழுவினரும், பி டிவிஷன் போட்டியில் சிஎம்டிஏ அணியின் சையது இப்ராஹிம் குழுவினரும்,சி டிவிஷன் போட்டியில் எஃப்எம் பிடிஏ அணையின் விவேகானந்தன் குழுவினரும், டி டிவிஷன் போட்டியில் ஓம்ஸ்ரீ அணியின் தேவராஜ் மற்றும் குழுவினரும், இ டிவிஷன் போட்டியில் டென்னிக்லோ அணியின் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் குழுவினரும், எஃப் டிவிஷன் போட்டியில் கிரீன் நெக்ஸ்ட் அணியின் சுரானா மற்றும் குழுவினரும்,ஜி டிவிஷன் போட்டியில் ராக்ஸ் டி கே கோர்ட் குகன் வருமா மற்றும் குழுவினரும்,எச் டிவிஷன் போட்டியில் பிஎஸ்ஜி டெக் அணியின் ஆதித்யா மற்றும் குழுவினரும், ஐ டிவிஷன் போட்டியில் டென்னிமாஷ் டாட்ஸ் அணியின் திரு. சரண்குமார் மற்றும் குழுவினரும், ஜெ டிவிசன் போட்டியில் ஓம்ஸ்ரீ அணியின் நந்தகுமார் மற்றும் குழுவினரும்,கே டிவிஷன் போட்டியில் சிசிடிஏ அணியின் ஷ்யாம் மற்றும் குழுவினர்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்கள்.
டாப் ஸ்டார் விருதுகளை பெற்றவர்கள் விபரம் :-
முறையே ஏ முதல் கே வரை உள்ள அணியினர் விபரம் :- சிசிடிஏ அணியின் கௌதம், சிஎம்டிஏ அணியின் ஹரிஷ் தேசூ, பிஎஸ்ஜி அணியின் பிரணவ், ஓம்ஸ்ரீ அணியின் ஆதித்யா ராமராஜ், டென்னிக்லோ அணியின் மவுலீஸ்வரன், ஸ்ரீவச்சா ஏஸ் அணியின் சுரேஷ் குமார், ராக்ஸ் டிகே கோர்ட் அணியின் அசின்தியா, பிஎஸ்ஜி டெக் அணியின் ஆதித்யா, டென்னிமாஸ் டாட்ஸ் அணியின் சத்தியகுமார், ஓம்ஸ்ரீ அணியின் அஜய் மாதவன் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பிரபு மற்றும் தினேஷ் நரசிம்மன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தேசிய தரவரிசை பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :
12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் 6-வது இடத்தை ஆதிஷ் பிஎம்-மும், 32-வது இடத்தை ஜோஹித் பிரபு-வும், 14 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கான பிரிவில் 76-வது இடத்தை ஏகன் பாலகுமாரும், பெண்கள் பிரிவில் 96-வது இடத்தை அனன்யா விஸ்வேஸ்வரனும், 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 60-வது இடத்தை மித்ர விந்தா சதீஷ் மற்றும் 63-வது இடத்தை கே. நல்யாஷினிக்கும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 15-வது இடத்தை ரோகித் ஹரி பாலாஜியும் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவை தொடர்ந்து, வீரர்கள், கிளப் பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் டென்னிஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க பொருளாளர் நரேந்திரா நன்றியரை ஆற்றினார்.