June 19, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருந்த கே.எம்.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து, நீலாம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. பேருந்தில் வழக்கம்போல் ஏராளமான பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நீலாம்பூர் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தடம் புரண்டு கவிழ்ந்தது.
விபத்தின் தாக்கத்தால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதுடன், உள்ளே இருந்த பயணிகள் அலறியடித்து தப்பிக்க முயன்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பேருந்திற்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதா, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.