June 13, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் சிறந்து விளங்கி வரும் வி.ஜி.எம். மருத்துவமனையும், விளையாட்டு துறையில் கால் நூற்றாண்டு சாதனையை நோக்கி பயணிக்கும் கோவை அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் 6-வது “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டிக்கான சீருடை வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டி, கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்று துறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டும் “ரன் ஃபோர் நேசன் – போதையில்லா கோவை” என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாரத்தான் போட்டியை முன்னிட்டு, வி.ஜி.எம். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டதுடன், அரசு பள்ளிகளுக்கு கணினிகளும் வழங்கப்பட்டன.
விழாவில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் பல்வேறு ரன்னர்ஸ் கிளப்புகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையும், பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன.
பதக்கங்கள், சிறப்பு சீருடைகள், உணவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த ஆண்டு மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வி.ஜி.எம். மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன்பிரசாத்,வி.ஜி.எம்.மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு மற்றும் கோவை அத்லெடிக் கிளப் தலைவர் டாக்டர் சுமன், கிளப் சேர்மன் விஜயகுமார், செயலாளர் ஸ்ரீனிவாசன், துணை செயலாளர் சிவகுமார் மற்றும் மேலாளர் தர்மராஜ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.